ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைத ராபாத் கொத்தப்பேட்டா பகுதியை சேர்ந்தவர் வி.சூரிய பிரகாஷ். இவரது மனைவி காமேஸ்வரி. இருவரும் மருத்துவர்கள். இவர்கள், தங்கள் வீட்டுக்கு யார் பசியோடு வந்தாலும் உணவு, உடை வழங்கி, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
மருத்துவ தம்பதியரின் வீட்டுக்கு அடைக்கலம் தேடி வருவோர், தங்களுக்கு பிடித்த உணவுகளை அவர்களே சமைத்து சாப்பிடலாம்.
இது குறித்து சூரிய பிரகாஷ் கூறியதாவது. எங்களது வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக செலவு செய்கிறோம். இதில் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு ஒருவர் பசியோடு வந்து உணவு கேட்டார். அவருக்கு உணவு சமைத்து பரிமாறினோம். அவர் பசியாற சாப்பிட்டு, மனதார வாழ்த்தினார். எங்களை வாழ்த்தியபோது அவரின்கண்ணீரை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். 2 நாட்களாக சாப்பிடவில்லை என்று அவர் கூறியபோது, எங்களின் மனம் உடைந்தது.
பசியால் வாடும் மக்களுக்கு சாப்பாடு வழங்க அன்று முடிவுசெய்தோம். இதற்காக எங்கள் வீட்டின் கீழ் பகுதியை ஒதுக்கினோம். கடந்த 2006-ம் ஆண்டில் ஏழைகளின் பசியாற்றும் சேவையை தொடங்கினோம். எங்களது வீட்டில் யார் வேண்டுமானாலும் வந்து தங்கி, விரும்பிய உணவு களை சமைத்து சாப்பிடலாம். வீட்டில் வைத்திருக்கும் ஆடை களை உடுத்திக் கொள்ள லாம். அவர் களுக்காக ஒரு நூலகத்தையும் உருவாக்கி உள்ளோம்.
அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை எங்கள் வீடு திறந்து இருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து தங்கி செல்லலாம். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், தீர்த்து வைக்கிறோம். எங்கள் வீட்டுக்கு “அந்தரி இள்ளு’’ என பெயரிட்டுள்ளோம். இதற்கு தமிழில் ‘‘அனைவரின் வீடு’’ என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பசியைப் போக்க உணவு, மானத்தை காக்க உடை, தங்கு வதற்கு இடம் வழங்கும் மருத்துவ தம்பதியரின் புகழ் ஹைதராபாத் மட்டுமின்றி தெலங்கானா முழு வதும் பரவி உள்ளது.