இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக மோசடி கும்பல்கள் மக்களைப் போலியாகக் கொலைகளை செய்வதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின்படி, இந்தியாவில் கணவன்-மனைவிகள் உண்மையில் உயிருடன் இருக்கும் தங்களுடைய வாழ்க்கைத் துணைவர்கள் இறந்துவிட்டதாக காப்பீட்டாளர்களிடம் கூறுவதாகவும், கற்பனையான உடன்பிறப்புகளை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மோசடி செய்பவர்கள் இறந்ததாகக் கூறப்படும் அந்த நபருடன் அரிதாகவே தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் எண்ணற்ற மோசடிகள் நடக்கிறது, ஆனால் தான் உயிருடன் இருந்தும் இறந்துவிட்டதாகச் சொல்ல யாராவது தன் வீட்டிற்கு வருவார்கள் என்று நினைத்து கூடப் பார்த்ததில்லை என்று அமினா பர்பின் என்பவர் ப்ளூம்பெர்க்கிடம் கூறியுள்ளார்.
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வசிக்கும் பர்பின், ஒரு ஆயுள் காப்பீட்டு புலனாய்வாளர் தனது இறப்பு சான்றிதழுடன் தன்னை சந்தித்த சம்பவத்தைப் பற்றி கூறியுள்ளார். அவரது இறப்புச் சான்றிதழ் மட்டுமல்லாது அவரது பெயர் அடையாளங்களுடன் இன்னும் பல ஆவணங்களைத் தன்னிடமே காண்பித்ததாக கூறினார்.
பர்பினின் குடும்பத்தினர் அந்த புலனாய்வாளரிடம் புரியவைத்தபின்பே உண்மை தெரியவந்தது.
ஆயுள் காப்பீட்டு தொகைக்காக அவரிடமிருந்து பிரிந்த கணவனால் ஒரு க்ளைம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்தனர். இதுபோன்று மக்கள் இறந்ததாகக் கூறி இந்திய மோசடி கும்பல்கள் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
பர்பின் தனது கணவர் தனது போலி மரணத்தைப் பயன்படுத்தி ஆயுள் காப்பீட்டு தொகையை வாங்க முயன்றதைக் கண்டுபிடித்த பிறகு அவரை விவாகரத்து செய்தார்.
மேலும், அவர் வசிக்கும் கிராமத்தின் பெரியவர்கள் மன்னிப்பு கேட்கும்படியும் அவருக்கு ரூ.2 லட்சம் கொடுக்குமாறும் அவரது முன்னாள் கணவருக்கு உத்தரவிட்டனர்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இதுபோன்று மோசடிகள் அதிகம் நடக்கின்றன. அமெரிக்காவில், மோசடி செய்பவர்கள் கடந்த ஆண்டு 30 பில்லியன் டொலர்களை இதுபோன்று ஏமாற்றியுள்ளனர். Truecaller-ன் அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 60 மில்லியன் அமெரிக்கர்கள் தொலைபேசி மோசடிக்கு பலியாகியுள்ளனர்.