ஆந்திரத்தின் பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு சிலையைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமது அரசு பழங்குடியினர் நலனுக்காகப் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக 1922 – 1924 காலக்கட்டத்தில் ரம்பா புரட்சியைத் தலைமையேற்று நடத்தியவர் அல்லூரி சீதாராம ராஜு.
அவரின் 125ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆந்திரத்தின் பீமாவரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.அதன் திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் நினைவுப் பரிசு வழங்கியதுடன் பொன்னாடை அணிவித்தார். விழாவுக்கு வந்திருந்த விடுதலைப் போராட்ட வீரரின் வழித்தோன்றல்களைச் சந்தித்துப் பிரதமர் மோடி வாழ்த்துப் பெற்றார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த தியாகிகளின் கனவை நனவாக்கும் வகையில் புதிய இந்தியா இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அதற்காகக் கடந்த எட்டாண்டுகளாக முழு அர்ப்பணிப்புடன் தான் பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
விடுதலைக்குப் பின் முதன்முறையாகப் பழங்குடியினரின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆந்திரத்தின் லம்பாசிங்கி என்னுமிடத்திலும் அத்தகைய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.