வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்-பாகிஸ்தானில் தன் ராணுவ தளத்தை அமைக்க சீனா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.நம் அண்டை நாடான சீனா, பாக்., உடன் இணைந்து ‘சீனா – பாக்., பொருளாதார வழித்தடம்’ என்ற பெயரில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பாக்.,கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் வழியாக வரும் இந்த வழித்தடத்திற்கு அங்கு உள்ள பிரிவினைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாக்., பெண் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.இரு மாதங்களுக்கு முன், சீன அதிகாரிகள் வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட தற்கொலைப் படை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வுகளும், பொருளாதார வழித்தடப் பணிகள் மந்தமாக நடப்பதும் சீனாவுக்கு கவலை அளித்துள்ளது. இதையடுத்து, சீன கம்யூ., மத்திய குழுவைச் சேர்ந்தவரும், வெளி விவகாரங்கள் குழு இயக்குனருமான, யங் ஜெய்ச்சி தலைமையிலான குழு, சமீபத்தில் இஸ்லாமாபாத் வந்தது. பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ராணுவ தலைமை தளபதி குமர் ஜாவேத் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியது.
அப்போது சீனா – பாக்., பொருளாதார வழித்தடப் பணிகள் நடக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் ராணுவ தளம் அமைக்க சீனா அனுமதி கோரியதாக தகவல் வெளியாகிஉள்ளது. இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக சீனா தெரிவித்து உள்ளது.பாக்., தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழலை சாதகமாக்கி, பாக்.,கில் ராணுவ தளம் அமைக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது.
Advertisement