திருவனந்தபுரம்: சொப்னாவுக்கு போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட ஆளுங்கட்சியை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பின்னர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சொப்னா கூறியிருந்தார். இதனால் தனக்கு ஒன்றிய அரசின் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி அவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.இதற்கிடையே கேரள அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகவும், கலகத்தை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் கூறி சொப்னா மீது முன்னாள் அமைச்சர் ஜலீல் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சொப்னாவுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் கேரள டிஜிபிக்கு சொப்னா நேற்று இமெயில் மூலம் ஒரு புகார் கொடுத்தார். அதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக புகார் கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் ஒருவர் போனில் தன்னை மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டார். விசாரணையில் சொப்பனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது மலப்புரம் மாவட்டம் திரூர்க்காடு பகுதியை சேர்ந்த முகம்மது நவ்பல் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.