ஈரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள பெரிய குட்டை வீதியில் `மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இங்கு 15 ஆசிரியைகள் பணியாற்றி வரும் நிலையில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 435 மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று இப்பள்ளி துவங்குவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் சத்துணவு மையங்களில் இரண்டு பக்கங்களிலும் இடிந்து விழுந்துள்ளது. இருப்பினும் பள்ளி வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி செயல்பட்டு கொண்டிருந்தபோது, ஆசிரியர்கள் அறையில் மேற்கூரை விழுந்து பயத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அதே அறையில் ஆசிரியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வரும் அவலம் நடந்து வருகின்றது. இச்சம்சவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வரை எந்த அதிகாரிகளும் பள்ளியை பார்வையிடவோ, விபத்தை தடுக்கவோ முன்வரவில்லை.
மாறாக வழக்கம்போல அனைத்தும் இயங்கி வருகின்றது. இதைக்கண்டு அம்மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 435 மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் ஒரே ஒரு கழிவறை உள்ள அவலம் உள்ளதும் தெரியவந்துள்ளது. அரசு இப்பள்ளியை கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் உயிரில் அலட்சியம் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
– செய்தியாளர்: டி.சாம்ராஜ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM