பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 22 மணி நேரத்தில் மீட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த யூனிஸ் (28) இவரது மனைவி திவ்யபாரதி (25) இவர்களுக்கு 5 வயதில் ஒருபெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 29 ம் தேதி பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட திவ்யபாரதிக்கு பெண்குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் இருவரும் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிரசிகிச்சை பாரமரிப்பு மைய பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திவ்யபாரதியின் அருகில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை மர்மநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். உறங்கிக்கொண்டிருந்த திவ்யபாரதி எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து கிழக்கு காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிசிடிவி கேமரா இல்லாததால், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்தபோது 2 பெண்கள் கையில் குழந்தையுடன் பேருந்தில் ஏறிச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து உக்கடம் பேருந்துநிலையம், கோவை ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர்.
கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் நேரிடையாக மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் 3 டிஎஸ்பிகள் தலைமையில் 12 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களின் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏறுவது தெரியவந்தது.
கோவை உக்கடம் பேருந்து நிலையம், ரயில்நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் பாலக்காடு செல்லும் ரயிலில் அவர்கள் செல்வது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் கோவை முதல் பாலக்காடு வரை உள்ள சுமார் 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒலவக்கோடு ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில், பொள்ளாச்சி பேருந்து நிலைய சிசிடிவி கேமரா பதிவில் காணப்பட்ட இரு பெண்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கொடுவாயூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் குழந்தையை தனிப்படை போலீஸார் மீட்டனர். குழந்தையை கடத்தி சென்ற இரண்டு பெண்களையும் போலீஸார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தையை எஸ்.பி பத்ரி நாராயணன் அதிகாலை 4 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைத்தார். கடத்தப்பட்ட குழந்தையை 22 மணிநேரத்தில் மீட்ட தனிப்படை போலீஸாருக்கு எஸ்.பி பத்ரி நாராயணன் பாராட்டுகளை தெரிவித்தார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: ”பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டதாக வந்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி, 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்திச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டது.
கேரள மாநிலம், குரங்கோடு, கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த ஜெமினா (34) மற்றும் அவருடன் வந்த இளம்பெண் இருவரையும் கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். ஜெமினாவிடம் நடத்திய விசாரணையில் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இந்நிலையில் மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டதன் பேரில் ஜெமினா தான் கர்ப்பமாக இருப்பது போல் போலியாக நடித்து வந்துள்ளார்.
தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் பொய்யாக கூறியுள்ளார். பின்னர் மணிகண்டனிடம் பிறந்த குழந்தையை காட்ட வேண்டும் என்பதற்காக இந்தக் குழந்தையை கடத்திச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.” இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.