மும்பை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி குறைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முக்கிய அறிவிப்பாக இதனை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு, முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்தது. மேலும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். பாஜக ஆளும் மாநிலங்களும் மற்ற சில மாநிலங்களும் வாட் வரியைக் குறைத்தன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவும் இதனை செய்ய முன்வரவில்லை.
இந்தநிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற பிறகு இந்த அறிவிப்பை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் ‘‘பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்குமாறு பிரதமர் மோடி அண்மையில் கேட்டுக் கொண்டார். ஆனால் முந்தைய அரசு இதனை செய்யவில்லை. மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி கணிசமாக குறைக்கப்படும். மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்’’ என்றார்.