மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய டாடா குழுமம் தங்கள் நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்துவதற்காக புதிய ஊழியர்களை நியமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற மாநிலங்களில் புதிதாக ஆட்களைத் தேர்ந்தெடுக்க நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இண்டிகோவின் ஊழியர்கள் பலர் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் அன்றைய தினம் இண்டிகோ நிறுவனத்தின் 55 சதவிகித விமானங்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட முடியாமல் தாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், இண்டிகோ நிறுவனத்தின் மொத்த செயல்பாடுகளும் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகிறது.
இதற்குக் காரணம் அன்றைய தினம் அதிகமான ஊழியர்கள் விடுப்பு எடுத்தது என்றும் அவர்களில் பலர் ஏர் இந்தியா நடத்திய நேர்முகத்தேர்விற்குச் சென்றுள்ளனர் என்றும் விமானத் தொழில் சார்ந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது பெரும் பேசுபொருளான நிலையில் இது பற்றிக் கூறிய சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் அருண்குமார், “இந்தப் பிரச்னை தொடர்பாக இண்டிகோ நிறுவனத்தின் தரப்பு எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.