இந்திய நிகழ்வுகள்
ரூ.7,000க்கு விற்கப்பட்டபச்சிளம் பெண் குழந்தை மீட்பு
ஜாஜ்பூர்-ஒடிசாவில், பிறந்து சில நாட்களே ஆன நிலையில், 7,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் சம்பேபால் என்ற கிராமத்தில், சுரேஷ் தாஸ் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் அவரது மனைவிக்கு நடந்த பிரசவத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே வறுமையில் தவிக்கும் சுரேஷ் தாஸ், 7,000 ரூபாய்க்கு, தன் மூன்றாவது குழந்தையை விற்றதாக தகவல் பரவியது. இதையடுத்து, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தி, விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு எதுவும் செய்யப்படவில்லை.”ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருப்பதால், மூன்றாவது குழந்தையை உறவினரிடம் கொடுத்தோம்; குழந்தையை விற்கவில்லை,” என, சுரேஷ் தாஸ் கூறினார்.
வெடிகுண்டு பீதி கிளப்பிய முதியவர் கைது
கொச்சி-கேரளாவில், விமான நிலையத்தில் சோதனை நடத்திய போது வெடிகுண்டு இருப்பதாக கூறிய முதியவர் கைது செய்யப்பட்டார்.கேரளாவில் இருந்து வெளிநாடு செல்லும் விமானத்தில் செல்ல, 63 வயது முதியவர் தன் மனைவியுடன் நேற்று அதிகாலை கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார். இங்கு, உடைமைகளை சோதனை செய்யும் ஊழியர், ‘பெட்டியில் என்ன இருக்கிறது’ என கேட்டார். அந்த முதியவர் கோபமாக, ‘வெடிகுண்டு இருக்கிறது’ என கூறியுள்ளார்.இதையடுத்து, அந்த முதியவருக்கும், அவரது மனைவிக்கும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. அந்த முதியவர் நெடும்பச்சேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மற்றொரு குற்றவாளிக்கும் ஆயுள்
கோத்ரா-குஜராத்தின் கோத்ராவில், 2002ல் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளிக்கும், ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மரண தண்டனை
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்திக்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த ரயில் பெட்டிக்கு, குஜராத்தின் கோத்ராவில், 2002 பிப்., 27ல் தீ வைக்கப்பட்டது. இதில், 59 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து மாநிலத்தில் பெரும் கலவரம் நிகழ்ந்தது. இதில், 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், சிறப்பு நீதிமன்றம், 2011ல் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில், 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில், 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றம் 2017ல் அளித்த தீர்ப்பில், 11 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குஜராத்தின் கோத்ராவைச் சேர்ந்த ரபிக் பதுக், கடந்தாண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.
35 பேர்
அவர் மீதான வழக்கு கோத்ரா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.இதையடுத்து, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இதுவரை, 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிகழ்வுகள்
மாமியாரை கொன்ற மருமகள் தற்கொலை
இடைப்பாடி,-இடைப்பாடி அருகே, கட்டையால் தாக்கி மாமியாரை கொலை செய்த மருமகள், தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி, தானமூர்த்தியூரைச் சேர்ந்த இருளப்பன் மனைவி தைலம்மமாள், 75; தம்பதிக்கு மூன்று மகன், மூன்று மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியே வசிக்கின்றனர். சில ஆண்டுக்கு முன் இருளப்பன் இறந்துவிட்டார். தைலம்மாள், இரண்டாவது மகன் லாரி டிரைவரான மெய்வேல், 45, அவரது மனைவி செல்வி, 41, ஆகியோருடன் வசித்தார்.தைலம்மாள், செல்வி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு ஏற்பட்ட தகராறில், செல்வி கட்டையால் தாக்கியதில், தைலம்மாள் படுகாயம் அடைந்தார்.
பேரன் ஈஸ்வரன், தைலம்மாளை, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையறிந்த செல்வி, போலீசுக்கு பயந்து, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 மகள்களுடன் தாய் தற்கொலை
புதுக்கோட்டை-குளத்தில் மூழ்கி இறந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், சித்தனவாசல் அருகே உள்ள மலையடி குளத்தில், மூன்று பெண்கள் சடலமாக மிதப்பதாக, அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.விசாரணையில், ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணு, 40, அவரது மகள்கள் கோபிகா, 16, மற்றும் தரணிகா, 14, என, தெரியவந்தது. குடும்ப பிரச்னை காரணமாக, அரிமளத்தில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு, மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாரிக்கண்ணு, சித்தன்னவாசல் மலையடி குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அன்னவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு பஸ் மோதி மூவர் பலி
மயிலாடுதுறை,–மயிலாடுதுறையில், இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில், அரசு பஸ்ஏறி தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை, ஐயாரப்பர் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல், 38; கூலித் தொழிலாளி. தே.மு.தி.க., மாவட்ட பிரதிநிதி பதவி வகித்தார்.நேற்று காலை, தன் குடும்பத்தினருடன் சேண்டிருப்பு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, மகள் சாய்சக்தி, 3, தம்பி மகன் நிதிஷ்குமார், 16, ஆகியோருடன் பைக்கில் மயிலாடுதுறை திரும்பியுள்ளார். குடும்பத்தினர் ஆட்டோவில் வந்தனர்.மயிலாடுதுறை மேம்பாலத்தில் குமரவேல் சென்று கொண்டிருந்த போது, எதிரே பைக்கில் வந்த நபர், பஸ்சை முந்த முயன்றார்.
அப்போது, இரு பைக்குகளும் மோதிக் கொண்டன. இதில் நிலைதடுமாறிய குமரவேல் குழந்தைகளுடன் கீழே விழுந்ததில், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் குமரவேல், சாய்சக்தி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தனர்.படுகாயமடைந்த நிதிஷ்குமார், சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து, மயிலாடுதுறை போலீசார் விசாரிக்கின்றனர்.
பச்சிளம் குழந்தை கடத்தல்: அரசு மருத்துவமனையில் துணிகரம்
பொள்ளாச்சி,-பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தையை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குமரன் நகரைச் சேர்ந்தவர் யூனீஸ், 28. இவரது மனைவி திவ்யா பாரதி. இவருக்கு கடந்த, 29ல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை, இவரது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பொள்ளாச்சி கிழக்கு போலீசார், அரசு மருத்துவமனை அருகே வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இரண்டு பெண்கள், பையில் குழந்தையை வைத்து ஆட்டோவில் செல்வது தெரிந்தது
சிறுமியை எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது
சின்னமனுார்–தேனிமாவட்டம் சின்னமனுார் அருகே எரசக்கநாயக்கனுாரில் 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்து அவரை தீ வைத்து எரித்துக்கொலை செய்ய முயற்சித்த அதே பகுதி ஈஸ்வரன் மகன் விஜயகுமாரை 19, போலீசார் கைது செய்தனர்
.எரசக்கநாயக்கனுார் சிறுமி அதேபகுதி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் அங்கு அங்கன்வாடியில் வேலை பார்க்கும் பாட்டியை பார்க்கச்சென்றார். அங்கு தனியாக விளையாடிய சிறுமியிடம் விஜயகுமார் தவறாக நடக்க முயற்சித்தார். சத்தம் எழுப்பியதால் காகிதத்தில் தீ வைத்து அதை சிறுமியின் உடையில் பற்ற வைத்து கொல்ல முயற்சித்தார். காற்றின் வேகத்தில் சிறுமியின் ஆடையில் தீ பரவியது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்ததால் விஜயகுமார் தப்பினார்.பலத்த தீக்காயமடைந்த சிறுமி, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்றுவருகிறார். விஜயகுமார் மீது போக்சோ, கொலை முயற்சி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை இன்ஸ்பெக்டர் சேகர் கைது செய்தார்.
இறைச்சிக்காக கடமான் வேட்டை: துப்பாக்கியுடன் 4 பேர் கைது
பந்தலுார்-விலங்கு வேட்டையில் ஈடுபட்ட, நான்கு பேர் கைது செய்யப்பட்டு, துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பால்மேடு வனப்பகுதியில், விலங்கு வேட்டையில் கும்பல் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் நள்ளிரவில், பாண்டியாறு- – புன்னம்புழா ஆற்றின் கரையோர வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள், பால்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தலைமையிலான வேட்டை கும்பல், கடமானை வேட்டையாடி, இறைச்சியை அவரின் வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
திடீரென வீட்டுக்குள் நுழைந்த போலீசார், அங்கிருந்த பாலகிருஷ்ணன், 38, பெரிய சூண்டியைச் சேர்ந்த மைக்கேல், 30, புஷ்பராஜ், 33, அருண், 26, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, 50 கிலோ கடமான் இறைச்சி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், இந்த வேட்டை கும்பல், கடமான் இறைச்சியை கிலோ, 500 – 700 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.அவர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
உலக நிகழ்வுகள்
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 பேர் இலங்கையில் கைது
கொழும்பு-இலங்கையில் இருந்து மீன்பிடி படகு வாயிலாக, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 51 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையில், அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில், பலர் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில், கிழக்கு கடல் பகுதியில், இலங்கை கடற்படையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மீன்பிடி படகு ஒன்றை தடுத்து நிறுத்தினர். அதில், சந்தேகத்துக்கு இடமாக 51 பேர் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கடற்படையினர் கைது செய்தனர்.கடந்த ஒரு வாரத்தில், இதுபோல நான்காவது சம்பவத்தை, கடற்படை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். மேற்கு கடல் பகுதியில் உள்ள மாராவிலா என்ற இடத்தில், நேற்று முன் தினம் நடந்த சோதனையில், ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற 24 பேரை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த மாதம், 27 மற்றும் 28ல், ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற, 100க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
‘விசா’
இலங்கை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவை, இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கான ‘விசா’ வழங்குவதாக, இலங்கை முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் தாமிகா பெரேரா அறிவித்தார்.
இலங்கை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவை, இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கான ‘விசா’ வழங்குவதாக, இலங்கை முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் தாமிகா பெரேரா அறிவித்தார்.