மதுரை: வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி. இவர், வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது வசந்தி ஜாமீனில் உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வசந்தி மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக துறை ரீதியாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிடக் கோரி வசந்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், “என் மீதான காழ்ப்புணர்ச்சியால் சிலர் என்னை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். அந்த சூழ்ச்சி குற்ற வழக்கு விசாரணை முடிந்த பிறகே வெளிச்சத்துக்கு வரும். எனவே குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ”குற்ற வழக்கு விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது. விதிவிலக்குகள் உள்ள சில வழக்குகளில், விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணை நிறுத்திவைக்கப்படும். இந்த வழக்கில் அது போல விதிவிலக்குகள் எதுவும் இல்லை. ஆகவே குற்ற வழக்கு விசாரணையும், அதே சமயத்தில் துறைரீதியான விசாரணையும் தொடரலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.