ஜம்மு: ஜம்முவில் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகளை உள்ளூர் கிராம மக்களே பிடித்து பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு ஆளுநர் மனோஜ்சின்ஹா ரூ.5 லட்சம் வழங்கினார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று கூறியதாவது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் தலிப் உசைன், பைசல் அகமது தர் ஆகிய 2 பேர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தின் ரீஸி மாவட்டம் டக்சன் தோக் கிராமத்தில் அவர்கள் பதுங்கியிருப்பதை கிராம மக்களே தெரிந்து கொண்டனர். உடனடியாக கிராமமக்கள் பலர் சேர்ந்து இருவரையும் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களுடைய துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டி ஆளுநர் மனோஜ் சின்ஹா ரூ.5 லட்சத்தை கிராம மக்களுக்கு வழங்கி உள்ளார்.
கைது செய்யப்பட்ட உசைன் ரஜோரியை சேர்ந்தவர். பைசல் அகமது தர் புல்வாமாவை சேர்ந்த வர். அவர்களிடம் இருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஒரு கை துப்பாக்கி, வெடிமருந்துகள் கைப்பற்றப்பட் டன. பிர் பஞ்சால் பள்ளத்தாக்குப் பகுதியில் நடைபெற்ற வெடி குண்டு வழக்குகளிலும் உசைன் தேடப்பட்டு வந்தார். அத்துடன் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் தீவிரவாத இயக்கத்துடன் உசைன் அடிக்கடி தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுள்ளார். இருவரும் லஷ்கர் இயக்கத்தில் மிக முக்கியமான சல்மானுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.
ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறும்போது, ‘‘கிராம மக்களே தீவிரவாதிகளை பிடித்து கொடுத்த துணிச்சலுக்கு ஒரு சல்யூட். கிராம மக்களின் இந்த துணிச்சல், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் முடிவுக்கு வருவதற்கு நீண்ட காலம் ஆகாது என்பதையே எடுத்துக் காட்டுகிறது’’ என்று பாராட்டு தெரிவித்தார். -பிடிஐ