கேரள மாநிலம், வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வைத்திரி அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று மாலை திடீரென பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. இதைக் கேட்ட மக்கள் அச்சத்துடன் அந்த தோட்டத்துப் பக்கம் பார்வையை திருப்பியிருக்கின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் மற்றும் செடிகள் அடித்துவரப்பட்டிருக்கின்றன. இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக வைத்திரி மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினருடன் வந்த மீட்புக் குழுவினர், நிலச்சரிவில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என பல மணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை.
இது குறித்து வயநாடு மாவட்ட நிர்வாகம், “இதே பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளும் உயிரிழந்தன. இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரியான நேரத்தில் மக்களை பாதுகாப்பான பகுதிகளில் இருக்கச் செய்தோம். இதனால், உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்கள் தவிர்க்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளனர்.