மும்பை: வைர நகை விற்பனையில் நடுத்தர மக்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆண்டு விழாக்காலத்தில் 10 முதல் 12 சதவீதம் விற்பனை உயரும் எனவும் டி பியர்ஸ் நிர்வாக இயக்குநர் சச்சின் ஜெயின் தெரிவித்தார். வைர உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டி பியர்ஸ், தனது ‘என்றென்றும் எப்போதும் வைரம்’ என்ற கருத்துருவின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் 3 நாள் அரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஜூவல்லரி நிறுவனங்களில் இருந்து தினமும் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்ஸ்வானா சுரங்கத்தில் உள்ளதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இருண்ட அறை உருவாக்கப்பட்டு, அதில் வைரத்தில் இருந்து வெளிப்படும் ஒளிச்சிதறல் எவ்வாறு உள்ளது என காட்சிப் படுத்தப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது. அவாந்தி கலெக்ஷன் என்ற புதிய வைர நகைகளையும் அறிமுகம் செய்தது. பின்னர் டி பியர்ஸ் நிர்வாக இயக்குநர் சச்சின் ஜெயின் பேசியதாவது:கொரோனா அலை ஊரடங்கால் பாதிப்பு இருந்தாலும், 2021ம் ஆண்டு வைர தொழில் துறைக்கு முக்கிய ஆண்டாக அமைந்தது. வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்திருந்தது. 2ம் உலகப்போருக்கு பிறகு இது எங்களுக்கு (வைர தொழில்துறைக்கு) சிறந்த ஆண்டாக அமைந்தது எனலாம். தேவையை விட சப்ளை குறைவு என்பதே நாங்கள் எதிர்கொண்ட சவால். இப்படி ஒரு சூழல் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தற்போது இந்தியாவின் வைர வர்த்தக சந்தை 600 கோடி டாலராக (ரூ.46,000 கோடி) உள்ளது. இது 2030ல் 1,750 கோடி டாலராக (ரூ.1,34,750 கோடி) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு தங்க நகைகளில் முதலீடு செய்த, குறிப்பாக நடுத்தர மக்கள் பலர் தற்போது வைர நகை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். 0.08 கேரட் முதல் வைர நகைகள் உள்ளன. சராசரியாக ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான வைர நகைகள் வாங்குவது நடுத்தர மக்களிடையே அதிகரித்துள்ளது. ரூ.50,000 க்கு கீழ், அதிலும் குறிப்பாக சிறிய வைர நகை விற்பனை சுமார் 85 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த ஆண்டு விழாக்கால விற்பனை 10 முதல் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.