ஹிரித்திக்கால் ‘விக்ரம் வேதா’ இந்தி பட்ஜெட் எகிறியதா? – ரிலையன்ஸ் நிறுவனம் முற்றுப்புள்ளி

நடிகர் ஹிரித்திக் ரோஷனால் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கின் பட்ஜெட் அதிகரித்துவிட்டதாக வெளியான தகவலை படக்குழு மறுத்துள்ளது.

‘ஓரம் போ’, ‘வா குவாட்டர் கட்டிங்’ படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த புஷ்கர் – காயத்ரி, அடுத்தாக ‘விக்ரம் – வேதா’ படத்தை இயக்கியிருந்தனர். மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. ரௌடியாக விஜய் சேதுபதியும், போலீஸ் அதிகாரியாக மாதவனும், படத்தில் தங்களது கதாபாத்திரங்களின் பங்களிப்பை மிக அழகாக காட்டியிருப்பார்கள். மிகப் பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக தென்னிந்தியப் படங்களுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளதால், ‘விக்ரம் வேதா’ படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதே பெயரில் ஹிரித்திக் ரோஷன், சயீஃப் அலிகான் வைத்து இந்தியில் ரீமேக் செய்து வந்தனர் இயக்குநர்களான புஷ்கர் – காய்த்ரி. ஒய்நாட் ஸ்டூடியோஸ், பிளான் சி ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக புகைப்படத்துடன் படக்குழுவும் அறிவித்திருந்தது. இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் உத்தரப்பிரதேசத்தில் படப்பிடிப்பை நடத்த இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி முடிவு செய்த சூழலில், உத்தரப்பிரதேசத்திற்கு ஹிரித்திக் ரோஷன் வர மாட்டேன் எனவும், துபாயில் செட் அமைக்குமாறு கூறியதால், பட்ஜெட் அதிகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

image

இந்நிலையில் இந்தத் தகவலை இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ ‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பு தொடர்பான நிறைய தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற தகவல்கள் வெளிவருவதை நாங்கள் கவனித்து வருகிறோம். ‘விக்ரம் வேதா’ படம், லக்னோ உட்பட இந்தியாவில் உள்ள பல இடங்களில் தான் அதிகளவில் படமாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். படத்தின் ஒரு பகுதி மட்டும், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் படமாக்கப்பட்டது.

ஏனெனில் அங்கு தான் பயோ பபுளுடன் பணியாட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தும் சூழலுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் ஸ்டூடியோவில் செட் அமைத்துக்கொள்ளும் வசதியும் இருந்ததால், படக்குழுவினர் அங்கு சென்று படம் பிடித்தனர். படக்குழுவினரின் உடல்நலம் மற்றும் நெறிமுறைக் காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்ந்தெடுத்தோம். இந்த உண்மைகளை திசை திருப்புவதற்காக வெளியாகும் தகவல்கள் தவறானது, பொய்யானது என்பதை தெளிவுப்படுத்துகிறோம். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் எப்போதும் ஆக்கப்பூர்வமான திறமையாளர்களிடமிருந்து பரிந்துரைகளை வரவேற்கும்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.