புதுடெல்லி:
ஹோட்டல்களும், உணவகங்களும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல்களும், உணவகங்களும் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில உணவகங்கள் மிக அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதாகவும் அண்மையில் சமூக வலைதளங்களில் பலரும் புகார் தெரிவித்தனர்.
சட்டப்படி சேவைக் கட்டணம் என்பது சேவைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு வாடிக்கையாளர் தாமாக விரும்பி செலுத்தும் ஒரு கட்டணம்தானே தவிர கட்டாயமாக செலுத்தப்பட வேண்டியதில்லை. ஆனால் பல உணவகங்களில் பில்லில் சேவைக் கட்டணம் சேர்த்து வசூலிக்கின்றன.
இதுகுறித்து புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து உணவகங்கள் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், சேவைக் கட்டணம் மற்றும் அதுதொடர்பாக புகார் தெரிவிப்பது குறித்து மத்திய அரசு இன்று வழிமுறைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து ஹோட்டல்களும், உணவகங்களும் பில்லில் சேவைக் கட்டணம் சேர்த்து வசூலிக்கக்கூடாது. வேறு எந்தவொரு மாற்று பெயர்களிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், இதையும் மீறி சேவைக் கட்டணம் வசூலித்தால் தேசிய நுகர்வோர் உதவி எண்ணை (National Consumer Helpline) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். 1800-11-4000 என்பது தேசிய நுகர்வோர் உதவி எண். இதுபோக 1915 எண்ணை தொடர்புகொண்டும் புகார் பதிவு செய்யலாம். அல்லது NCH மொபைல் ஆப் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். நுகர்வோர் ஆணையத்திடம் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.