மதுரை: மதுரை மாநகராட்சி வருவாய் துறைக்கு புதிய உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 6 அதிகாரிகள் இந்த துறையில் மாற்றப்பட்டதால் நிலையான வருவாய் துறை உதவி ஆணையர் இல்லாமல் இந்த துறை திணறிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் வருவாய் துறை முதன்மையானது. கடைகள் ஏலம், வாடகை வசூல், வரி நிர்ணயம், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்த துறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த துறை மூலம் வசூலிக்கப்படும் வரி இனங்கள் மூலமே பெறப்படும் வருவாயை கொண்டே மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. மக்களுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டாகவே மாநகராட்சி வருவாய் துறை நிலையான உதவி ஆணையர் இல்லாமல் தடுமாறி நிற்கிறது. கடந்த சில மாதங்கள் முன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணமில்லாமல் மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியது.
இந்நிலையில் தற்போது வருவாய் துறை உதவி ஆணையராக இருந்த தெட்சிணாமூர்த்தி, திடீரென்று விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பணிஇடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக அங்கு பணிபுரிந்த நகராட்சி ஆணையாளர் செய்யது முஸ்தபா கமால் வருவாய் துறை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், 5வது மண்டல உதவி ஆணையாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாநகராட்சி மைய மண்டல வருவாய்துறை உதவி ஆணையர் மீண்டும் இரட்டை பொறுப்புகளில் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே, வருவாய் துறை உதவி ஆணையாளராக இருந்த தெட்சிணாமூர்த்தி இந்த இரட்டை பொறுப்புகளால் சிரமப்பட்டு வந்தார். தற்போதும் அவரைப் போலவே புதிதாக வந்தவருக்கும் இரட்டை பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி வருவாய் துறைப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால், வருவாய் துறைக்கு நிலையான தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முன்பு மாநகராட்சியில் பணிபுரியும் உதவி ஆணையர் பதவி உயர்வு பட்டியலில் இருக்கும் அதிகாரிகளே வருவாய் துறை உதவி ஆணையாளராக பொறுப்பு பணியிடத்தில் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் வருவாய் துறை ஆணையர் பணியை மட்டும் பார்ப்பார்கள். அதனால், வரி வசூல் உள்ளிட்ட வருவாய் துறை பணிகள் பாதிக்கப்படாமல் இருந்தது. வருவாய் துறை உதவி ஆணையர் பணியிடத்தில் பணிபுரிகிறவர்களும் அலுவலகத்திலே இருப்பார்கள்.
ஆனால், தற்போது 5வது மண்டல உதவி ஆணையாளராகவும் கூடுதல் பொறுப்பாக வ நியமிக்கப்படுவதால் பெரும்பாலான நேரத்தில் வருவாய் துறை உதவி ஆணையர் அலுவலகத்திலேயே இருப்பதில்லை. அவர்கள் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு இங்கு வருகிறார்கள். கூடுதல் வேலைப்பளு காரணமாக அவர்களால் சிறப்பாக பணிபுரிய முடியவில்லை. தொடர்ச்சியான வருவாய் துறை பணி அனுபவமும் இல்லாமல் அடிக்கடி வருவாய் துறை உதவி ஆணையர் மாற்றப்படுவதால் வரி வசூல், வரி நிர்ணயம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது.