சினிமாக்களில் வருவது போன்று திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் வசமாக சிக்கும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
இப்படி இருக்கையில் ஹ்ரிதிக் ரோஷன் அமிர்கான் நடிப்பில் வெளியான தூம் படத்தில் வருவது போன்று ஒடிசாவில் உள்ள பள்ளியில் கணினி மற்றும் ஜெராக்ஸ் மெஷின்களை திருட்டு கும்பல் ஒன்று திருடிச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது.
நபரங்புர் மாவட்டத்தின் கதிகுடா என்ற பகுதியில் உள்ள இந்திராவதி மேல்நிலை பள்ளியில் நேற்று (ஜூலை 3) உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு வகுப்பறையில் உள்ள பிளாக் போர்டில் எழுதி வைத்து போலீசுக்கு சவால் விட்டிருக்கிறார்கள்.
மறுநாள் காலை பள்ளியை திறந்து பார்த்தபோது தலைமை ஆசிரியரின் அறையில் இருந்த கணினி, ஜெராக்ஸ் மெஷின், பிரிண்டர் என பல பொருட்கள் களவாடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த பியூன், உடனே பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
பின்னர், தலைமை ஆசிரியர் தரப்பிலிருந்து கதிகுடா போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அப்போது, பள்ளியில் இருந்து பொருட்களை திருடிச் சென்ற திரும்பும் போது க்ளாஸ் ரூமில் உள்ள போர்டில் ”இது தூம் 4 விரைவில் திரும்பி வருவோம்” என எழுதியதோடு சில மொபைல் நம்பர்களையும் எழுதிவிட்டு அந்த திருட்டு கும்பல் சென்றிருக்கிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பள்ளியில் திருடிய அந்த கும்பலை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஷ்ரி கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM