'அங்கு ஆதித்யா; இங்கு உதயநிதி.. தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்' – பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, காவல் நிலைய மரணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கல்வித்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் குழப்பமான நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து ஜூலை 5-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில்நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:

‘திராவிட மாடல்’ ஆட்சி, இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ்வதாக கூறுகின்றனர். ஆனால், பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் நமக்கு பாடம் எடுத்து வருகின்றன. கேரளாவில் தேர்தல் வாக்குறுதியில்கூட சொல்லாத கம்யூனிஸ்ட் அரசு, வரியை குறைத்ததன் மூலம் விலையையும் குறைத்துள்ளது. பிரதமர் மோடியும் 2 முறை விலையை குறைத்துள்ளார்.

முதியோர் உதவித் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்துவதாக கூறினர். ஆனால், தற்போது ரூ.1,000 வாங்குபவர்களில் 2 சிலிண்டர் வைத்திருப்போரின் பெயரை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்றனர். அதையும் செய்யவில்லை.

எதிர்க்கக்கூடிய கட்சிகள் இல்லாமல், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக வளர்ந்து வருகிறது. பாஜகவின் ஆட்சியை பார்த்து, எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கரைந்துவிடுகின்றன. தமிழகத்திலும் இந்த நிலை வர வெகு தூரம் இல்லை.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து வெளியே வந்தார் ஏக்நாத் ஷிண்டே. இரண்டரை ஆண்டுகள் கழித்து மகாராஷ்டிராவில் இது நடந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த சிவசேனா தற்போது 13 எம்எல்ஏக்களை கொண்டதாக மாறியுள்ளது. இங்கும் அதுபோன்ற காலம் வரும்.

‘சிவசேனாவும், திமுகவும் ஒன்றா’ என்பார்கள். எந்த வித்தியாசமும் கிடையாது. அங்கு பால் தாக்கரேவின் முதல் மகன், இங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் மகன் ஆகிய இருவருமே சினிமாவில் நடிக்க முயற்சித்து பெரிதாக வெற்றி பெறவில்லை. பால் தாக்கரேவின் 2-வது மகனும், கருணாநிதியின் 2-வது மகனும் இந்த குடும்பங்களைவிட்டு விலகி இருக்கின்றனர். பால் தாக்கரேவின் 3-வது மகன் மகாராஷ்டிர முதல்வராக இருந்தவர். கருணாநிதியின் 3-வது மகன் இங்கு முதல்வர்.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, சிவசேனா இளைஞர் அணி தலைவர். இங்கு முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர். ஆதித்யா தாக்கரே அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டார். ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டார். அதேபோல, இங்கும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார். அமைச்சரவை மாற்றத்துக்கு தமிழகம் தயாராக உள்ளது.

சமூக நீதியை வைத்து திமுக அரசியல் செய்கிறது. எது சமூக நீதி என்பதை பாஜகவிடம் இருந்து கற்க வேண்டும்.

கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. வரும் டிச.31-ம் தேதிக்குள் 505 வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டால், தமிழகத்தில் பாதி டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால், கன்னியாகுமரி விவேகானந்தா பாறையில் இருந்து அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதி பாஜக பாத யாத்திரை தொடங்கும். 365 நாட்களில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்று கோபாலபுரத்தில் யாத்திரையை நிறைவு செய்வோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்கள் கிடைத்து, 2026-ம் ஆண்டு 150 எம்எல்ஏக்களுடன் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும். இனி வருகிற காலம் பாஜகவின் காலம். இவ்வாறு அவர் கூறினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, உடுமலையில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, தேசிய பொதுச் செயலாளர் கர்னல் பாண்டியன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்துவிளக்கில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவை சிவானந்தா காலனியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பாஜக சார்பில்நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.