கர்நாடக மாநிலத்தில் ஓட்டுவதற்கு தகுதியற்ற 3,768 பேருந்துகளை கே.எஸ்.ஆர்.டி.சி. இயக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் மராட்டியத்திற்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபகாலமாக கர்நாடக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அவ்வாறு விபத்தில் சிக்கும் பெரும்பாலான அரசு பேருந்துகள் 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியவை என்று கூறப்படுகிறது. பொதுவாக 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய பேருந்துகளுக்கு பராமரிப்பு செலவுகள் அதிகம் என்பதால் அரசு பேருந்துகள் சேவையை நிறுத்திவிட்டு அந்த பேருந்துகளின் பாகங்கள் அகற்றப்படுவது வழக்கம்.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் இயக்கப்பட்டு வரும் 8199 அரசு பேருந்துகளில் 3,768 அரசு பேருந்துகள் 9 லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னரும் சாலையில் பயணிக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளார். அந்த பேருந்துகளால்தான் விபத்து நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. தலைவர் சந்திரப்பா கூறும்போது… கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 8,199 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியும் சில பேருந்துகள் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு, ஊழியர்கள் வேலை நிறுத்தம் போன்ற காரணங்களால் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை தற்போது தான் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். புதிதாக 1,500 பேருந்திடம் கொள்முதல் செய்ய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM