இத்தாலி நாட்டில் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுவதால், பலர் மலையேற்றம் மற்றும் பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் சில சமயங்களில் பனிச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதுமுண்டு.
இந்த நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டவர்களில் ஏழு பேர் திடீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் மூன்று பேர் இத்தாலியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது சடலங்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டது.
காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 13 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PC: Autonomous Province of Trento via AP
இந்த விபத்து தொடர்பாக இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி கூறுகையில்,
‘இது நிச்சயமாக சில கணிக்க முடியாத சம்பவம். இது போன்ற விபத்துகள் சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை நிலைமையைப் பொறுத்தது.
இன்று இத்தாலி பாதிக்கப்பட்டவர்களுக்காக அழுகிறது. அவர்களை அனைத்து இத்தாலியர்களும் அன்புடன் அரவணைக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற ஒரு சோகம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.