பெங்களூர் துணை ஆணையர் அலுவலகம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தை Anti-Corruption Bureau (ஏ.சி.பி) உலுக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹெச்பி சந்தோஷ் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், கடைசி விசாரணையில் ஏ.சி.பி, ஏ.டி.ஜி.பி-யின் தகுதி, நேர்மையை மாநில அரசு சரிபார்த்திருக்கிறதா எனக் கர்நாடக அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர், “துணை ஆணையர் அலுவலகத்தில் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்ட குற்றவாளிகள் தொடர்பான ஜாமீன் மனுக்களை விசாரித்து வருகிறேன். இந்த நிலையில் என்னுடன் பணியாற்றும் சக நீதிபதி இந்த வழக்கை இவ்வளவு தீவிரமாக விசாரித்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவீர் எனவும், இதேபோன்ற சூழ்நிலையில் ஒரு நீதிபதி வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டதையும் தெளிவுபடுத்தினார். இது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
என்னுடைய கவலையெல்லாம் ஊழல் புற்றுநோயால் சமுதாயமும், ஊழல் தடுப்புச் சட்டமும் அரிக்கப்பட்டுவிடுமோ என்பதுதான். நீதித்துறையைப் பாதுகாப்பது என்னுடைய கடமை, நான் அரசியலமைப்புடன் மட்டுமே இணைந்திருக்கிறேன். அரசியலமைப்புச் சட்டமா அல்லது குற்றம்சாட்டப்பட்ட அந்த சக்தி வாய்ந்தவரா என்பதைப் பார்க்கலாம்.
ஊழல் தடுப்பு ஆணையம் வசூல் மையமாக மாறிவிட்டது. கர்நாடக மாநிலம் முழுவதும் ஊழலில் சிக்கித் தவிக்கிறது. வைட்டமின் M (Money) இருந்தால் யாராகயிருந்தாலும் காப்பாற்றப்படுவார்கள். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அடிபணிய மாட்டேன். எனவே, பூனைக்கு மணி கட்டத் நான் தயார். நான் நீதிபதியான பிறகு சொத்துக் குவிக்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை, நான் எந்த அரசியல் சித்தாந்தத்தையும் கடைப்பிடிக்கவில்லை. பதவி இழந்தாலும் கவலையில்லை. விவசாயியின் மகனான எனக்கு உழுவதற்கு நிலம் இருக்கிறது. வயலை உழுவது ஒன்றும் அவமானமல்ல.
கர்நாடக மாநிலத்தில் ஊழல் வழக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதற்கான இரண்டு நிகழ்வுகளைக் கூறுகிறேன். முதலில், 4 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக ‘பி’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவர் குற்றவாளி எனத் தெரிந்தும் ‘பி’ அறிக்கை தாக்கல்செய்த ஏ.சி.பி-யின் விசாரணை அதிகாரிக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு அந்த நீதிபதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட மற்ற நீதிபதி, ஒரு வாரத்தில் குற்றவாளி ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான பி அறிக்கையை ஏற்றுக்கொண்டார். இப்படித்தான் இருக்கிறது தற்போதைய நிலை” எனத் தெரிவித்திருக்கிறார்.
நீதிபதியின் இந்தக் குற்றச்சாட்டு மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.