பெய்ஜிங்: தங்கள் ஆராய்ச்சி குறித்து பொய் கூறுவது நாசாவுக்கு இது முதல் முறை அல்ல என்று சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
வர்த்தகம் மட்டுமல்லாது விண்வெளி குறித்த ஆராய்ச்சி போட்டியில் சீனா, அமெரிக்கா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நாசாவின் தலைவர் பில் நெல்சன் அளித்த பேட்டியில், “விரைவில் சீனா நிலவுக்கு உரிமை கோரும்; மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளைத் தடுக்கும்” என்று கூறியிருந்தார். மேலும், ”சீனா மற்ற நாடுகளிலிருந்து தொழில்நுட்பங்களை திருடுகிறது . பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை அழிக்கிறது” என்றும் விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், “சீனாவின் விண்வெளி ஆய்வு குறித்து நாசா பொய் கூறுவது முதல் முறை அல்ல. சமீப ஆண்டுகளாக விண்வெளியை போர் செய்யும் களமாகவே அமெரிக்கா வரையறுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் விமர்சனத்துக்கு நாசா தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் திங்களன்று நடந்த சந்திப்பின்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் நிலவில் அல்லது அதற்கு அருகில் உள்ள சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்து பணி செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.