தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 10,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 12,000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
இதற்க்கு கடும் எதிர்க்கு கிளம்பியுள்ள நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கில், முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், இது ஏற்கத்தக்கது அல்ல என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான தகுதி அற்றவர்களை பணியில் அமர்த்த வாய்ப்பாக இது அமையும் என்றும் நீதிபதி எம் எஸ் ரமேஷ் கருத்து தெரிவித்து இருந்தார்.
மேலும், ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது? என்று உயர்நீதிமன்ற கேள்வி எழுப்பி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூன் எட்டாம் தேதியே விசாரணை செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.