எரிபொருள் வரிசையில் இருந்த தனியார் பேருந்து சாரதி ஒருவரை, கடற்படை அதிகாரி தாக்கியதில் சாரதி காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலி தெவட்ட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த போது இந்த தாக்குதல் நடந்ததாக சாரதி முறைப்பாடு செய்துள்ளார் என காலி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனக்கூறிய கடற்படை அதிகாரி
பேருந்துக்கு டீசலை பெற்றுக்கொள்ள வரிசையில் இருந்த போது எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்த கடற்படை அதிகாரி ஒருவர், வந்து எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் முன் அனுமதி அட்டைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என கூறியதாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.
எனினும் பேருந்துக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள தான் வரிசையில் இருந்தாக கூறிய போது கடற்படை அதிகாரி, பேருந்து கதவை திறந்து தாக்கியதாகவும் மேலும் சில கடற்படையினர் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு தாக்க வந்தாகவும் சாரதி கூறியுள்ளார்.
தாக்குதலில் ஏற்பட்ட வலி மற்றும் அச்சம் காரணமாக பேருந்தை எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக சாரதி தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
குருநாகல் சம்பவத்தின் பின் நடந்த சம்பவம்
குருநாகல் யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஒரு பொது மகனை இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்ததுடன் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
இவ்வாறான நிலையில், காலியில் பேருந்து சாரதியை கடற்படை அதிகாரி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.