அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணித் தாய்மார்களும் இன்புளுவன்சா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம் என்று தொற்றுநோய்கள் தொடர்பான பிரதான வைத்திய நிபுணர் சமித கினகே கூறியுள்ளார்.
இவ்வாறானவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வைரஸ் பொதுவாக ஒவ்வொரு வருடமும் பரவுவதனால் அதிகமானோர் இந்த தொற்றுக்கு உள்ளாகின்றனர். இது அதிகமாக வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை பாதிக்கிறது என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இளைஞர்களிடையே இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், காய்ச்சல் அறிகுறி தென்படுமிடத்து, மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இந்த நோயுடன் மருத்துவ சிகிச்சைக்கு செல்லும்போது மற்றும் நெரிசலான இடங்களுக்கு செல்லும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வைத்திய நிபுணர் சமித கினகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வைரஸ் தொற்று ஆபத்தான நிலை அல்ல என்றும், இதற்காக மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.