புதுடெல்லி: இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதன் பிறகு ஜூன் 17, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ”மேகேதாட்டு திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது” என கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலாண்மை ஆணையக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என கூறப்படுகிறது.