குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ஆம் தேதி (இன்று) தொடங்கும். ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். அதன் மீதான பரிசீலனை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும். ஜூலை 22ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி சார்பில் இதுவரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல், ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இவர்களில் திரவுபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக முன்னரே வேட்பாளரை திரவுபதி முர்மவை வேட்பாளராக அறிவித்திருந்தால், அவரை ஆதரித்திருந்திருப்போம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.