குப்பைத்தொட்டியும் குழந்தையும்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

குப்பைத் தொட்டியில் வீசப்படும் குழந்தைகள் பற்றிய செய்திகளை 2022லும் கூட படிக்க முடிகிறது. குறிப்பாக குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தையை தெருநாய்கள் கவ்விச் செல்வது போல கடித்துக் குதறியது போல செய்திகளை பார்க்கும்போது பக்கென்று இருக்கிறது.

எழுத்தாளர் நரனின் “கேசம்” சிறுகதையில் வரும் முதன்மை நாயகிக்கு ஒரு சின்ன ப்ளாஸ்பேக் வைத்திருப்பார் நரன். தனக்கு பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்த சிலரிடம் நாயகி ஒப்படைத்துவிட்டு வர அவர்களில் சிலரோ அந்தக் குழந்தையை குப்பைத் தொட்டியில் கொண்டுவந்து வைப்பார்கள். அதை சற்று தொலைவில் இருந்து பார்க்கும் அந்த நாயகி பதறிப் போவாள். அவள் கண்ணு முன்னாடியே அந்தக் குப்பைத் தொட்டியில் இருக்கும் குழந்தையை நாய் ஒன்று கவ்வ முயலும். தூரத்திலிருக்கும் நாயகி அந்த நாயை துரத்த முடியாமல் இக்கட்டான சூழல் ஒன்றில் சிக்கித் தவிப்பாள். அந்தச் சிறுகதையை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் அந்தக் காட்சியை இன்னும் மறக்க முடியவில்லை. எழுத்தாளர் பவா செல்லத்துரையும் அந்தக் காட்சி எழுதப்பட்ட விதத்தை உணர்வுபூர்வமாக ஒரு இலக்கிய நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.

புதுப்பேட்டை

இலக்கியத்தை போல தமிழ் சினிமாவில் “குப்பைத் தொட்டியும் குழந்தையும்” என்கிற கான்செப்ட்டை யோசித்த போது கமலஹாசனின் “காதலா காதலா”, செல்வராகவனின் “புதுப்பேட்டை”, சார்லஸின் “அழகு குட்டி செல்லம்” ஆகிய மூன்று படங்கள் நினைவுக்கு வந்தன.

காதலா காதலா படத்தில் கமல், பிரபுதேவா மற்றும் அவருடன் வசிக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் ஆகியோர்
“அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே… அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே…” என்று குப்பைத் தொட்டியை பார்த்து பாடி அதற்கு மாலையிட்டு அதை கடவுளாக வணங்குவார்கள். அவர்கள் ஒவ்வொருவராய் குப்பைத் தொட்டியை தொட்டு வணங்க அப்போது குப்பை அள்ள வரும் வையாபுரியிடம் “ஏனோ தானோன்னு குப்பை அள்ளிட்டு போகாத… எத்தன குப்ப தொட்டில எத்தன குழந்தைங்க இருக்கும்னு யாரு கண்டா… குழந்தகீது இருக்குதானு நல்லா பாத்துட்டு அப்புறம் குப்பை அள்ளிட்டு போ…” என்று சொல்வார் கமல். படத்தின் அறிமுக காட்சியே இதுதான். “காதலா காதலா” காமெடி படமென்றாலும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு காட்சியை போகிற போக்கில் காட்டியிருப்பார் கமல். அழுத்தமா காட்டியிருந்தா மட்டும் இந்த சமூகம் அப்படியே திருந்தி கிழிச்சிருக்குமா என்ன? என்பதுகூட படக்குழுவினரின் மனநிலையாக இருக்கலாம்.

அடுத்ததாக புதுப்பேட்டை படத்தில் தனக்கு பிறந்த குழந்தையை நல்ல படியாக வளர்க்க முடியாமல் எதிரிகளுக்கு பயந்து இரவு நேரமொன்றில் யாருக்கும் தெரியாமல் குப்பைத்தொட்டியில் கொண்டுவந்து வைப்பார் தனுஷ். குப்பைத் தொட்டியில் வைக்கப்படும் அந்தக் குழந்தையின் அருகே பால்பாட்டிலையும் பணக்கட்டுகளையும் வைப்பார் தனுஷ். “என்னடா அப்பா இங்க கொணாந்து போட்டனனேனு பாக்குறியா… உன்ன எப்படியெல்லாமோ வளக்கனும்னு ஆசப்பட்டேன்…” என்று குழந்தையை பார்த்து கண்ணீர் மல்க நீண்ட வசனம் பேசிவிட்டு அங்கிருந்து நகர்வார். அப்போது தெருநாய் ஒன்று குப்பைத் தொட்டி அருகே வர தனுஷ் பதறிபோய் நாயை துரத்தி அடிப்பார்.

அடுத்த சில நொடிகளில் அவ்வழியே வீட்டு வேலைகள் செய்யும் அக்கா ஒருவர் வர அவரை பார்த்து “அம்மா அம்மா… இங்க பாரும்மா குப்பை தொட்டில குழந்தை இருக்கு” என்பார். அச்சச்சோ என பதறி அந்தக்கா வந்து குழந்தையை தூக்க குழந்தையின் மீது எறும்புகள் ஊறும். அதை அந்தக்கா துடைத்துவிட்டு “எங்கயாவது எவளுக்காவது பெத்து போட்டுட்டு கடைசில இங்க கொண்டாந்து போட்டறாளுங்க” என்று பேசிவிட்டு குப்பைத் தொட்டியில் இருக்கும் பணக்கட்டுகளை எடுக்காமல் குழந்தையை மட்டும் தன்னோடு எடுத்துச் செல்வார் அந்தக்கா. ரொம்பவே அழுத்தமான காட்சி இது. இந்தக் காட்சியின் போது வரும் உரையாடலை எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய விதமும் அதை செல்வா படமாக்கிய விதமும் நம்மை கலங்க வைக்கும்.

அழகு குட்டி செல்லம்

சார்லஸ் இயக்கத்தில் உருவான “அழகு குட்டி செல்லம்” படத்தில் ஆட்டோக்காரராக இருக்கும் கருணாஸ் தனக்கு எப்படியாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென ஆசைப்பட அவருக்கு தொடர்ச்சியாக பெண் குழந்தைகளே பிறக்கும். ஒருகட்டத்தில் விரக்தியான கருணாஸின் மனைவி தனக்குப் பிறந்த பச்சை பெண்குழந்தையை குப்பை கூளத்தில் வைத்துவிட அந்தக் குழந்தையை பள்ளி சிறுவர்கள் எடுத்துச் சென்று பள்ளியில் நடக்கும் “இயேசு பிறப்பு” தலைப்பிலான நாடகமொன்றில் பயன்படுத்த முயலுவார்கள். அப்போது மாணவர்களுக்குள் நடக்கும் பிரச்சினையில் அந்தப் பெண் குழந்தை மாடியிலிருந்து தவறி கீழே விழ அக்குழந்தை சரியாக அலங்கார பலூனில் விழுந்து சரிந்து வந்து குழந்தையின்மையால் மன வருத்தத்தோடு இருக்கும் வினோதினியின் கையில் விழும்.

வினோதினி அக்குழந்தையை கண்ணீர் மல்க வாரி அணைத்து முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக்கொள்வார். அக்குழந்தை தான் மாணவர்கள் நடத்தும் “இயேசு பிறப்பு” நாடகத்தில் குழந்தை யேசுவாக நடிக்க வைக்க வேண்டுமென சிறுவர்கள் முயல “இது பெண் குழந்தையாச்சே… இயேசு ஆண் குழந்தை தான…” என்று ஒரு சிறுவன் கேள்வி எழுப்ப “இயேசு ஆணா பெண்ணானு யாரு கண்டா…

* “வீடு” படத்தில் தாத்தா தனது பேத்தி கட்டும் வீட்டை நெகிழ்ச்சியோடு தொட்டுப் பார்க்கும் காட்சி…

*”கடைசி விவசாயி” படத்தில் குப்பைத்தொட்டி அருகே இருக்கும் முனிவர் விஜய் சேதுபதியின் நெற்றியில் திருநீறு வைத்துவிட்டு மீண்டும் கையில் திருநீறு கொடுத்து “அங்கொருத்தி இருக்காளே… மறந்துட்டியா…” என்று சொல்லும் காட்சி…

* “இன்று நேற்று நாளை” படத்தில் மியா சார்ஜ் டைம் டிராவல் செய்து தன் அம்மாவின் பிரசவத்தின் போது அவருக்கு தோள் கொடுத்து தாங்கி பிரசவ அறையிலிருந்து வெளியே கொண்டுவரப்படும் குழந்தையை ஆசையோடு வாங்கி அக்குழந்தையின் நெற்றியில் முத்தமிடும் காட்சி…

இம்மூன்று காட்சிகளும் தமிழ் சினிமாவின் மிக அழகான அழுத்தமான காட்சிகள். அந்தக் காட்சிகள் வரிசையில் “அழகு குட்டி செல்லம்” படத்தில் இடம்பெறும் குப்பையிலிருந்த குழந்தை கடவுளாக காட்டப்படும் காட்சியை நிறுத்தலாம்.

இலக்கியம், சினிமா வழியாக குப்பைத்தொட்டியில் குழந்தைகள் வீசப்படுவது மனிதநேயமற்ற செயல் என போதிக்கப்பட்டாலும் ஸ்மார்ட் ரேசன் கார்ட் யுகத்திலும் குப்பைத் தொட்டியில் குழந்தைகள் வீசப்படுகிறது என்பது மனதை கலங்கடிக்கும் சமூக அவலம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.