புதுடெல்லி: குறைவான ஜிஎஸ்டி வரியால் ஏழைகளின் சுமை குறையும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் அடுத்தடுத்த பதிவில் நேற்று கூறியிருப்பதாவது:
சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரி 18%, மருத்துவமனை அறை மீதான ஜிஎஸ்டி வரி 5%, வைரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 1.5%. பிரதமர் மோடி யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை வலியுடன் நினைவுபடுத்துவதாக ‘கப்பார் சிங் டேக்ஸ்’ (ஜிஎஸ்டி) உள்ளது.
ஒற்றை மற்றும் குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் இணக்க செலவைக் குறைக்கும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதைய ஜிஎஸ்டி சட்டம் பொருளாதாரத்தை கடுமையாக பாதிப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்கு பதில் திருத்தப்பட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.