அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், அடுத்தப் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மாறிமாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் மருது அழகுராஜ். மேலும் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், இது தொடராக சென்னையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நமது அம்மா பத்திரிகையில் முறைகேடு செய்து அதன் மூலமாக வெளிச்சத்திற்கு வந்து விலக்கி வைக்கப்பட்டவர் மருது அழகுராஜ். இன்று அவர் ஓபிஎஸ்-ன் பக்கம் சாய்ந்து கொண்டு கட்சியின் மீது ஒரு களங்கத்தை சுமத்தி இருக்கிறார். பொதுக்குழு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளின் படி சட்ட திட்ட விதிகளின்படி நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமைக்கு தலைமை தாங்க வேண்டும் என ஒருமித்த குரல் அந்த பொதுக்குழுவில் எதிரொலித்தது. பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையிலும், கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர்கள் மீது சேற்றை வாரி இருக்கும் வகையிலும் மருத அழகுராஜ் அன்றைக்கு பேட்டி அளித்திருக்கிறார். இந்த சம்பவம் அனைத்து அதிமுக உறுப்பினர்களையும் கொதித்தெழ செய்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு மாதத்தில் நடந்த கொடநாடு சம்பவம் குறித்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டார். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னிறுத்தினார். டிடிவி தினகரனை மறைமுகமாக ஓபிஎஸ் சந்தித்தது குறித்து மருது அழகுராஜ் சொல்லாதது ஏன்?
கருணாநிதி என்பவர் தீய சக்தி. அந்த தீய சக்தி எந்த நிலையிலும் தலை தூக்கி விடக் கூடாது என்று வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்ப்பு கொள்கையை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றினார்கள். டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள்… அதிமுக-வின் ஒரே நிலைபாடு, இரண்டு விஷயங்கள் தான். ஒன்று ஒற்றைத் தலைமை, மற்றொன்று சசிகலா, தினகரன் ஆகியோரை எந்த நிலையிலும் அதிமுகவில் ஏற்றுக் கொள்ளாது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் திமுக அரசை பாராட்டுவதை அதிமுக தொண்டன் எப்படி ஏற்றுக் கொள்வான்?” என்றார்.