’சுசி கணேசன் குறித்து கருத்து தெரிவிப்பது ஏன்?’ – லீனா மணிமேகலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

இயக்குனர் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்ட பிறகும், கவிஞர் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தனக்கு எதிராக ட்விட்டர் சமூக ஊடகத்தில் ‘மீ டு’ புகார் தெரிவித்தது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசி கணேசன் இணையும் செய்தி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும்  கருத்துக்களை பதிவிட்டனர்.
 
image
உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிட ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும், (தி நியூஸ் மினிட்) இணையதள செய்தி நிறுவனத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குனர் சுசி கணேசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

image
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சுசி கணேசன் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் லீனா மணிமேகலை தொடர்ந்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் தொடர்ந்து பத்திரிக்கைகளில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என கேள்வி எழுப்பியதுடன், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் லீனா மணிமேகலைக்கு அறிவுறுத்த வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுசி கணேசன் வழக்கு தொடர்பாக லீனா மணிமேகலை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்கலாம்: கனடாவிலும் எதிரொலித்த ‘காளி’ சர்ச்சைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.