சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மேக்னசைட் ரயில்வே நிலையம் அருகே கருப்பூரில் ரயில்வே பாலம் சீரமைப்பு பணி நேற்று நடந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 16 ரயில்கள் தாமதமாகும் என்று இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ரயில்வே நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் பாலப்பணிகள் முடிவு பெறாததால், சேலம் வழியாக செல்லும் 20 மேற்பட்ட ரயில்கள் 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை தாமதமானது.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதுடன், தண்ணீர் சாப்பாடு கிடைக்காமல் குழந்தைகளுடன் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக, நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் – கோர்பா எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஆழப்புழா-தன்பாத் ஆகிய விரைவு ரயில்களில் பயணிக்க கூடிய பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து ரயிலில் பயணித்து வந்த பயளிகளிடம் பேசியபோது, “ஒரு முன் திட்டமிடல் இல்லாமல் ரயில்வே நிர்வாகம் செயல்பட்டுள்ளது. பச்சிளங்குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. உணவு எதுவும் கிடைக்கவில்லை. ரயிலை நடுக்காட்டில் நிறுத்திவைத்துள்ளனர். தாமதமாகும் என்று தெரிந்தபின்னும் உணவு கிடைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்காலாம். இதனால் பலர் ரயிலில் இருந்து இறங்கி நடந்தே சென்று அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறிச்சென்றனர்.
ரயில் தாமதமானது குறித்து ரயில்வே நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, “வழக்காமாக ரயில்வே பணிகள் நடைபெறும்போது இரண்டு நாள்களுக்கு முன்பே அதுகுறித்து அறிவிக்கப்படும். அவ்வாறு தான் இந்த முறையும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பாலப்பணி என்பதால் உரிய நேரத்தில் முடிக்கக்கூடிய வேலை கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது” என்றனர்.