ஜார்கண்ட்: ஐஐடி மாணவிக்குப் பாலியல் தொல்லை… ஐஏஎஸ் அதிகாரியைக் கைதுசெய்த போலீஸ்!

ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில், ஐஐடி மாணவியொருவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியொருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகாரளித்ததன்பேரில், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மாணவியின் புகாரின்பேரில் போலீஸாரால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமது, துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் அமன் குமார், “ஐ.ஏ.எஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமது, மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்றிரவு காவலில் வைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354A- பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிரிவு 509 ஆகியவற்றின் கீழ் சையத் ரியாஸ் அகமதுமீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பிற மாநிலங்களிலிருந்து ஜார்கண்டின் குந்தி மாவட்டத்துக்கு பயிற்சிக்கு வந்துள்ள 8 ஐ.ஐ.டி பொறியியல் மாணவர்களில் ஒருவர்.

ஐஏஎஸ் அதிகாரி கைது – ஜார்கண்ட்

கடந்த சனிக்கிழமையன்று, துணை வளர்ச்சி ஆணையர் இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொள்ள இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொண்டவர்களுக்கு மதுபானங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, மாணவி தனியாக இருப்பதைக் கண்டு அங்கு அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்ததையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.