பெரியார் காலத்திலேயே திமுகவால் கைவிடப்பட்ட “தனித்தமிழ்நாடு” என்ற கருத்தியலை மீண்டும் பொது வெளிக்கு கொண்டு வந்திருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. தொடர்ச்சியாக இன்னும் பல எதிர்வினைகளையும் போராட்டங்களையும் கூட பாஜக முன்னெடுக்க கூடும் என்பதால் திமுக எவ்வளவு உறுதியாக தனது கருத்தில் இருக்கப் போகிறது என்பது அக்கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரியவரும்.
திமுக – பாஜக இடையே மட்டுமல்லாது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி இருக்கிறது “தனித் தமிழ்நாடு” பற்றிய திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு. பாஜக தலைவர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு எதிர்ப்பை கிளப்பும் அளவுக்கு ஆ.ராசா என்ன பேசினார்? அதை எதிர்க்கும் பாஜக தலைவர்கள் சொல்வது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
“தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள்! மாநில சுயாட்சி தாருங்கள்! – ஆ.ராசா
நாமக்கலில் திமுக சார்பில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஜூலை 3 அன்று நடைபெற்றது. இதில் நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநில சுயாட்சி கொள்கைக்கு வந்துவிட்டது. தந்தை பெரியார் சாகும் வரை தனித் தமிழ்நாடு கேட்டார் . பெரியார் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட இன்றைக்கு திமுக ஆட்சியிலே இருக்கிறது. அவர்கள் மாநில சுயாட்சி என்று தங்களை சுருக்கிக் கொண்டார்கள். ஆனால் இளைஞர்களே சுதந்திர தமிழ்நாடு கேளுங்கள் என்றார்.
மேலும் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமருக்கு அமித் ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் ” என்று பேசினார்.
‘அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்’
‘தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,
மாநில சுயாட்சி தாருங்கள்’
‘அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்’ https://t.co/gFDZoOSrn7 pic.twitter.com/BEapnK60Rq
— A RAJA (@dmk_raja) July 3, 2022
முதல்வர் ஸ்டாலின் ஆ.ராசாவை கண்டிக்க வேண்டும் – ஹெச். ராஜா
ஆ.ராசாவின் இந்த பேச்சு தொடர்பாக தேசிய ஊடகங்களும் விவாதங்களை நடத்தின. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும் இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும்” என கூறியுள்ளார். மேடையிலே ஆ.ராசாவின் பேச்சை முதல்வர் ஸ்டாலின் கைதட்டி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆ.ராசாவின் பேச்சை உடனடியாக கண்டிக்க வேண்டும் இல்லையேல் ஆ.ராசாவின் பேச்சு தமிழக அரசின் நிலைப்பாடாக கருதப்படும்.
— H Raja (@HRajaBJP) July 4, 2022
தமிழகத்தை இரண்டாக பிரிப்போம் – நயினார் நாகேந்திரன்
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை சட்டமன்ற பாஜக உறுப்பினரும், பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் “தனித் தமிழ்நாடு வேண்டும் என்று ஆ.ராசா கூறுகிறார். நான் சொல்கிறேன் தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும்.” என்று பரபரப்பாக பேசினார்.
“தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும். ஆந்திராவில் தெலங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளன. எனவே, தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும். தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம், பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறலாம் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் அதிகாரங்களை பிடுங்கிய கோபத்தில் ஆ.ராசா பேசினார் – டிகேஎஸ் இளங்கோவன்
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் “உத்தரப்பிரதேசம் மிகப் பெரிய மாநிலம். அதை பிரிக்காமல் அதிகார போதையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம். மூன்றாக பிரிப்போம் என்று சொல்கிறார்கள். மத்திய அரசு இரண்டு பணக்காரர்களுக்காக நடத்தப்படுகிறது.
அதானி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுத்த பிறகு அவரிடம் 600 கோடிக்கு ஒப்பந்தம் போடுகிறார்கள். மாநில அரசின் அதிகாரங்களை பிடுங்கிக் கொள்கிறார்கள். இந்த கோபத்தில் ஆ ராசா பேசியுள்ளார். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என மக்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.
மீண்டும் திகாருக்கு செல்லப்போகிறார் ஆ.ராசா – கரு.நாகராஜன்
இது தொடர்பாக பேசியுள்ள பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் “தனித் தமிழ்நாடு கேட்கிறார் ஆ.ராசா. சட்டவிரோதமாக பேசிக்கொண்டிருக்கிறார் ஆ.ராசா. தனித்தமிழ்நாடு கேட்டுவிட்டு நடமாடிவிட முடியுமா? இது மன்மோகன்சிங் காலமல்ல ; இது நரேந்திர மோடி காலம். மீண்டும் திகாருக்கு செல்லப்போகிறார் ஆ.ராசா. ஆ.ராசா ஒருவர் போதும் திமுகவை அழிக்க.!
2ஜி விவகாரத்தில் காங்கிரஸை அழித்தார் ஆ.ராசா. அன்று எடப்பாடி பழனிசாமியின் தாயை பழித்தார். இன்று தாய்நாட்டை பழிக்கிறார். ஒட்டுமொத்த தமிழர்களும் இணைந்து திமுகவை ஆட்சியில் அமரவைக்கவில்லை. ஏதோ 2 சதவிகிதத்தில் பெற்ற வெற்றி இது. திமுகவுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கிறது” என்று கூறினார்.
அடுத்து என்ன நடக்கும்?
ஒரு கருத்தை தெரிவிக்கும்போது அதற்கான எதிர்வினை வெளிப்படுவது இயல்பே. ஆனால் தனது கருத்தில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதும் அதன் எதிர்வினைகளுக்கு எவ்வாறு பதில் அளிக்கிறோம் என்பதிலும் தான் அக்கருத்து சரியா? தவறா என்பது புலனாகும். பெரியார் காலத்திலேயே திமுக கைவிட்ட “தனித்தமிழ்நாடு” என்ற கருத்தியலை மீண்டும் பொது வெளிக்கு கொண்டு வந்திருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. தொடர்ச்சியாக இன்னும் பல எதிர்வினைகளையும் போராட்டங்களையும் கூட பாஜக முன்னெடுக்க கூடும் என்பதால் திமுக எவ்வளவு உறுதியாக தனது கருத்தில் இருக்கப் போகிறது என்பது அக்கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரியவரும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM