வட இந்தியாவில் வளரும் செந்தூரம் மரத்தை முதன் முறையாக திருச்சியிலும் வளர்க்க முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
செந்தூரம் மரம் வட இந்தியாவில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் எங்கும் செந்தூரம் மரம் இல்லை. சத்தீஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, செயலாளராக உள்ள டாக்டர் சி.ஆர்.பிரசன்னா அந்த வகை மரங்களை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவரது தீவிர முயற்சியால் அதன் விதைகள் சேகரிக்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டு திருச்சியில் உள்ள மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு சார்பில் வளர்க்கப்பட்டது.
வளர்ந்த கன்றுகளை திருச்சி முழுவதும் நடுவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகத்தின் முதல் செந்தூர மரம் திருச்சி ரயில்வே சந்திப்பு காலனியில் உள்ள கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் கலந்து கொண்டு செந்தூர மரத்தை அறிமுகப்படுத்தி நட்டு வைத்தார்.
திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா. கிருஷ்ணசாமியிடம் செந்தூர மரக்கன்றுகளை ஆட்சியர் வழங்கினார். அவை பெருமாள் கோயில்களில் நடப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மரம் பி.தாமஸ், தண்ணீர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கேசவன், அறநிலைய துறை மண்டல துணை ஆணையர் சி.செல்வராஜ், நிர்வாகக்குமு ஆர்.கே.ராஜா, எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சிக்குமு முகிலன், ஸ்ரீரங்கம் ராஜு, ஆர்.ஸ்ரீதேவி, தா.லூர்துமேரி , பத்மஸ்ரீ கிராமாலயா தாமோதரன், விஐயகுமார், மகேந்திரன் மற்றும் செயல் அலுவலர் பா.சுதாகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
செந்தூரம் ரகத்தைச் சேர்ந்த மரங்கள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் வளரும் தன்மைகொண்டவை. மரச் சிற்பங்கள் செய்வதற்காகவும், இசைக் கருவிகள் செய்வதற்காகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மரங்களை வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“