சென்னை: தமிழ், தமிழர்கள், தமிழ் இனத்தை மேம்படுத்துவதாக நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, ‘தமிழால் இணைவோம்’ என்ற இயக்கத்தை முன்னெடுப்போம் என்று வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அமெரிக்கா, கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாக விளங்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (‘ஃபெட்னா’) 35-வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில், 2020-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ் பீட விருது, இலக்கியச் செம்மல் தமிழ்கோ இளங்குமரனாருக்கும், 2021-ம் ஆண்டுக்கான விருது, ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்பட்டது.
இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால் அது நம் தமிழ் இனம்தான். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். எங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழகம்தான் தாய்வீடு.
தமிழ் நிலத்தின் தொன்மை என்பது ஏதோ பழம்பெருமையோ, இலக்கியக் கற்பனையோ மட்டுமல்ல, அது வரலாற்றுப்பூர்வமானது. இத்தகைய வரலாற்றை மீட்டெடுக்கும் காலத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மிக மிகப் பொருத்தமானது.
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்
கீழடியில் கிடைத்த சான்றுகள்தான், இந்தவரலாற்று வழித்தடத்தை மீண்டும் புதுப்பித்துள்ளன. அதேபோல, சிவகளை முதுமக்கள்தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. 1150 என்று கண்டறியப்பட்டுள்ளது. ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன்.
சங்ககால துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரத்தையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ‘கீழடி உள்ளிட்ட ஆய்வுகள் மூலம் நமது வரலாற்றை மீட்பது, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை நடைமுறைப்படுத்துவது, உலகளாவிய தமிழ் இனத்தை ஒருங்கிணைப்பது, தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரை துடைப்பது, தமிழகத்தை அனைத்து மேன்மைகளும் அடைந்த நாடாக வளர்த்தெடுப்பது’ ஆகிய 5 குறிக்கோள்கள் கொண்ட அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி தத்துவங்களைக் கொண்ட திராவிட மாடல் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘எல்லார்க்கும் எல்லாம்’ கோட்பாடு
திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனப் பெயராக, இடப் பெயராக, மொழிப் பெயராக இருந்தது. இது ஓர் இயக்கத்தின் பெயராக கடந்த 100 ஆண்டு காலமாக இருக்கிறது. இன்று ஓர் அரசியல் தத்துவத்தின் பெயராக, கோட்பாட்டின் பெயராக இருக்கிறது.
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கோட்பாட்டின் அரசியல் வடிவமாக அது சொல்லப்படுகிறது. இந்த தத்துவத்துக்கு எதிரானவர்கள், எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க கூடாது என்று நினைப்பவர்கள்தான் திராவிட இயக்கத்தையும், இந்த ஆட்சியையும் எதிர்க்கின்றனர். இவர்களை மீறித்தான் தமிழ் இனம் வளர்ந்துள்ளது.
நம் அனைவரது செயல்பாடுகளும் தமிழை, தமிழ் இனத்தை, தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக நம் செயல்கள் அமைய வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். தமிழை, தமிழகத்தை விட்டுவிடாதீர்கள். ‘தமிழால் இணைவோம்’ என்பதுதான் இன்று நாம் முன்னெடுக்க வேண்டிய இயக்கமாகும். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது.
இறை நம்பிக்கையில் தலையிட மாட்டோம்
மத மாய்மாலங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. யாருடைய இறை நம்பிக்கையிலும் ஒருநாளும் தலையிட மாட்டோம். அதேநேரம், தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக, மதத்தை பயன்படுத்துவதைத் தான் எதிர்க்கிறோம்.
தமிழ் இனத்தை பிளவுபடுத்தும் முதல் சக்தியாக இருக்கிறது சாதி. அதனால்தான் ‘தமிழால் இணைவோம்’ என்பதை நமது முழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நம்மை நாடுகள் பிரித்தாலும், நிலங்கள் பிரித்தாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு. அத்தகைய தமிழ் மொழியை வளர்ப்போம். தமிழ் இனத்தைக் காப்போம். இவ்வாறு முதல்வர் கூறினார்.