சென்னை: தரைப்படைக்கான அக்னி வீரர்கள் தேர்வு முகாம் தமிழகத்தில் 2 இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் வகையில் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையும் மீறி அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது. இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம் 2 இடங்களில் நடைபெறுகிறது. முதல் கட்ட முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், தென்காசி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 30ம் தேதி வரை joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2-ம் கட்ட முகாம் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கோவை, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகரி, சேலம், தேனி, கிருஷ்ணகரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி தேதி வரை joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.