புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் 19ம் தேதியாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20ம் தேதி நடக்கும். மனுவை திரும்ப பெற 22ம் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய துணை ஜனாதிபதி, ஆகஸ்ட் 11ம் தேதி பொறுப்பேற்பார். இதுவரை முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இருப்பினும், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அல்லது விரைவில் பாஜ.வில் இணைய உள்ள பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த 788 எம்பி.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.