நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நுபுர் சர்மாவை கட்சி பதவியில் இருந்து பாஜக நீக்கியது. இதற்கிடையே தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நுபுர் சர்மா சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் கருத்து தெரிவிக்கும்போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
”உதய்பூரில் நடந்த கொலைக்கு நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம். அவரது பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது. அவரது செயல்பாடுகளால் நாட்டில் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? நுபுர் சர்மாவின் வக்கீல்களும் அவருக்கு ஆதரவாக செயல்படுவது வெட்கக்கேடானது. சர்ச்சை ஏற்பட்டதும் அவர் தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக சொல்வது மிக மிக தாமதமான முடிவாகும். நாட்டு மக்களின் உணர்வை நுபுர் சர்மா கண்டுகொள்ளாமல் புறம் தள்ளியுள்ளார். நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு நுபுர் சர்மா தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் நுபுர் சர்மா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் நேரில் தோன்றி அவர் மன்னிப்பு கேட்பதுதான் நல்லது” என்று காட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த இந்த கருத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் நுபுர் ஷர்மா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் துரதிஷ்டவசமானது என விமர்சித்துள்ளனர். நுபுர் ஷர்மா தொடர்ந்த வழக்கிற்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கும் துளியும் தொடர்பில்லை என தெரிவித்துள்ள அவர்கள், இதுபோன்ற கருத்துகள், நீதித்துறை கண்ணியத்திற்கும் எதிரானது என்றும், நீதித்துறையின் எல்லையை மீறிய செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டில் நடக்கும் கொந்தளிப்புக்கு நுபுர் ஷர்மா மட்டுமே பொறுப்பு என்பது போல அமைந்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை எனவும் நீதித்துறையின் வரலாற்றில் துரதிருஷ்டவசமாக வெளியிடப்பட்ட அந்த கருத்துகள் அழிக்க முடியாத வடுவாகி உள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை – நுபுர் சர்மாவுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM