நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளைப் பதிவுசெய்த பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தொடர்ந்து, அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பல்வேறு மாநிலங்களிலும் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, அந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் நுபுர் ஷர்மா. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நுபுர் ஷர்மாவின் பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்திருந்தது.
நுபுர் ஷர்மாவின் மனுவை விசாரித்த சூர்யகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “நுபுர் ஷர்மாவின் பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். அனைத்து மக்களும் மற்ற மதத்தினருடைய நம்பிக்கைகளிலும், மற்ற விவகாரங்களிலும் மரியாதை கொடுக்கவேண்டும் என்ற சூழலில், நுபுர் ஷர்மா இப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார். இதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. மேலும், நுபுர் ஷர்மா மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற முடியாது எனச் சொல்லி அந்த மனு தள்ளுபடியும் செய்யப்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடத் தொடங்கினர். “இந்திய நீதித்துறையின் கருப்பு நாள் இன்று. நுபுர் ஷர்மா விஷயத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எப்போதும் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்” என்று பா.ஜ.க-வினரும், இந்துத்துவ ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். ட்விட்டரில், #SupremeCourtIsCompromised #ISupportNupurSharma உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகின. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூர்யகாந்த்தும், பார்திவாலாவும் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டனர்.
இந்த நிலையில், ஜூன் 3 ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஒடிசா சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை சார்பில் நடத்தப்பட்ட விழா ஒன்றில் நீதிபதி பார்திவாலா கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், “சட்டம் சார்ந்த விவகாரங்களை அரசியலாக்க வேண்டும் என்பதற்காகவே நாட்டில் சிலர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட சில விவகாரங்களில் சமூக வலைதளங்களே விசாரணை நடத்தும் சம்பவங்கள், நீதித் துறையின் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறுவதில்லை. மாறாக மற்றவரைக் குறை கூறுவதற்காகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சமூக வலைதளங்களை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை பாதுகாக்க முடியும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்கேற்ப நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க முடியாது. சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றங்கள் முடிவெடுக்க முடியும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நீதிமன்றம் எப்போதும் வரவேற்கிறது. அதே நேரத்தில், நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார் பார்திவாலா.
பார்திவாலா வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், “நீதிமன்ற உத்தரவுகளுக்காக நீதிபதிகளைத் தனிப்பட்ட முறையில் பெயர் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தையே அச்சுறுத்தும் வகையில் சிலர் பதிவிட்டிருந்த கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூக வலைதளங்களில் இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகின்றன. இது தொடர்பான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் நீதிபதி பார்திவாலா சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களின் தாக்கத்தால், நீதித்துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. எனவே, சமூக வலைதளங்களுக்கு சில விதிமுறைகளை வகுத்து, அதை ஒழுங்குபடுத்துவது அவசியம்” என்கிறார்கள்.