அதிமுக-வில் திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமைத் தீர்மானத்தை நிறைவேற்றவிட எடப்பாடி தரப்பும், எப்படியாவது பொதுக்குழுவுக்குத் தடை வாங்கிட ஓ.பி.எஸ் தரப்பும் சட்டரீதியாக முட்டிமோதி வருகின்றனர். பெரும்பான்மை நிர்வாகிகளிடன் ஆதரவோடு ஒற்றைத் தலைமைக்கான முன்னெடுப்புகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முன்னெடுத்த நிலையில், பொதுக்குழுவைத் தடைசெய்ய வேண்டும் என சட்டரீதியான மோதலுக்கு ஆரம்பப்புள்ளியிட்டது ஓ.பி.எஸ் தரப்பு.
ஆனால், நீதிமன்றமோ, “பொதுக்குழுவுத் தடை விதிக்கமுடியாது. அதேவேளை, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனிதனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர, மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது” என உத்தரவிட்டது. தொடர்ந்து, ஓ.பி.எஸ் தரப்பும் இ.பி.எஸ் தரப்பும் அடுத்தடுத்து நீதிமன்றங்களை நாடி தங்களுக்கான காய்களை நகர்த்தி வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது என்பதால், ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்குத் தடைவிதிக்கக் கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்தார். இந்தமனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் எழுப்ப முடியாது. ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல” என விளக்கம் அளித்தனர். இது ஒருபுறமிருக்க, 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என இருநீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாரும் மேல்முறையீட்டுக்கு வந்தால், தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை அதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழும் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இந்தநிலையில், பொதுக்குழு அறிவித்தப்படி ஜூலை 11- நடைபெறுமா என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்,
“சட்ட ரீதியாகப் பார்த்தால் எடப்பாடி தரப்பினர் தங்களுக்கு எதிராக இருந்த தடைகளை ஒவ்வொன்றாகத் தகர்த்து வருகின்றனர். 23 தீர்மானம் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என்கிற நீதிமன்ற உத்தரவு அந்தப் பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என நீதிமன்றமே சொல்லிவிட்டது. அதனால் பொதுக்குழு நடத்துவதற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்றே நினைக்கிறோம். ஆனால், சட்டம் என்ன சொல்கிறது, கட்சியின் பை லா என்ன சொல்கிறது என்பதைத்தாண்டி டெல்லி என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பொறுத்துதான் எந்த முடிவுகளையும் சொல்லமுடியும். நீதிமன்றத்தை மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தையும் நாடியிருக்கிறார் ஓ.பி.எஸ். நாளை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், அதைத் தேர்தல் ஆணையத்திலும் சமர்பிக்கவேண்டும். கட்சியிலேயே ஒருதரப்பு அதற்கு எதிராக இருக்கும்போது, இதைவைத்து நிச்சயமாக மத்திய பாஜக அரசு அரசியல் விளையாட்டுக்களை அரங்கேற்றும். வேண்டுமென்றே அங்கீகரிக்காமல் தாமதப்படுத்தும்.
எங்கள் கட்சியில் ஏற்பட்டிருக்கும் இந்தப்பிளவில் நேரடியாக பன்னீருக்கு ஆதரவு, பழனிசாமிக்கு ஆதரவு என முடிவெடுக்காமல் இரண்டு பேரையும் ஆதரிப்பதுபோல் தூண்டிவிட்டு, தேவைப்படும் நேரங்களில் இருவரையுமே அரவணைத்து காரியம் சாதித்துக்கொள்ள நினைக்கிறது பாஜக தரப்பு. எடப்பாடி ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுத்தால், அதனால், தென்மாவட்ட அதிமுக தொண்டர்களின் வாக்குகளை நாம் தேர்தல்களில் இழக்கநேரிடும். அதேவேளை, கட்சியில் பெருவாரியான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருக்கும்போது ஓ.பி.எஸ் பக்கம் மட்டும் ஆதரவாக இருப்பது நன்றாக இருக்காது என்றும் பா.ஜ.க நினைக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேவைகளைப் பொறுத்து இருவரையும கைகோக்க வைப்பதா, இல்லை தனித்தனியாக்கி சின்னத்தை முடக்குவதா என்று திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேவேளை எடப்பாடி தரப்பு, ராகுல் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்திவருவதால், பன்னீரை தங்களின் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பாஜக-வின் தற்போதைய திட்டமாக இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. எது எப்படியோ, கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்தப்பிளவை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது பாஜக என்பது மட்டும் உண்மை” என்கிறார்கள்.
பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் இதுகுறித்துக் கேட்க, “இது அதிமுக உட்கட்சி விவகாரம். அதில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.