புதுடெல்லி: பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஆயுதங்களுடன் காரில் ஆட்டம் போட்ட மேலும் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு வீரர் அங்கித் மற்றும் அவரது கூட்டாளி சச்சினை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மூசேவாலாவை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் காரில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் பின்னணியில் பஞ்சாபி பாடல் ஒலிக்கிறது. அப்போது குற்றவாளி ஒருவர், தனது துப்பாக்கிகளைக் காட்டுவதும் வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோவில் காணப்படும் சச்சின், அங்கித், பிரியவ்ரத், கபில் ஆகிய குற்றவாளிகள் உள்ளனர். இவர்களில் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தீபக் என்பவன் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளான். சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த இவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 கையெறி குண்டுகள், 9 மின்சார டெட்டனேட்டர்கள், 3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.