பீமவரம்: ஆந்திர மாநிலம் பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, ரூ.3 கோடியில் 30 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அவர், தெலுங்கில் தனது உரையை தொடங்கினார். இதனை கேட்டு மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்றைய தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும், அவர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் கண்டிப்பாக தெரிய வேண்டும். இதற்காகத்தான் ‘ஆசாத்கா அம்ருத் மஹோத்சவ்’ எனும் பெயரில் விழா கொண்டாடுகிறோம்.
அல்லூரி சீதாராம ராஜு வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடமாகும். நமது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என கர்ஜித்தவர் அல்லூரி. அவர் பழங்குடி இனத்தில் பிறந்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டிய மகான். ஆந்திரா ஒரு புண்ணிய பூமி மட்டுமல்ல. வீர பூமியும்கூட. ஆதிவாசிகளின் பிரதிநிதியான அல்லூரி சீதாராம ராஜு போன்றவர்களே எனக்கு உத்வேகம் அளிக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளோம். இப்போது பழங்குடியினரின் உற்பத்தி பொருட்களை சர்வதேச சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகள் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. அதில் விளைந்து வரும் மூங்கில்களை வெட்டி உபயோகிக்கும் உரிமையை ஆதிவாசிகளுக்கு வழங்கிடும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். தாய்மொழி கல்விக்காக 750 ஏகலவ்ய பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில் அல்லூரி நினைவு அருங்காட்சியம் கட்டப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பின்னர் ஆந்திர அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் விஜயவாடா சென்ற பிரதமர் அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.
சுதந்திர போராட்ட வீரர் மகளின் பாதங்களை தொட்டு வணங்கிய பிரதமர்
ஆந்திராவின் பீமவரம் அருகே உள்ள பேத அமிரம் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
விழா மேடையில் சுதந்திர போராட்ட தியாகிகளையும், அல்லூரி சீதாராம ராஜுவின் வாரிசுகளையும் ஆந்திர முதல்வர் ஜெகன், பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு பிரதமர் மோடி பொன்னாடை போர்த்தி கவுரப்படுத்தினார்.
அப்போது, மகாத்மா காந்தியுடன் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறைக்கு சென்ற சுதந்திர போராட்ட வீரர் கிருஷ்ணமூர்த்தி-அஞ்சுலட்சுமி தம்பதியினரின் மகள் கிருஷ்ண பாரதி (90), வீல் சேரில் அங்கு வந்திருந்தார். பிரதமர் மோடி அவரின் பாதங்களை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார்.