சித்தன்னவாசல் அருகே மலையடிபள்ள தண்ணீரில் விழுந்து தாய் மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்களான கோபிகா, தாரணிகா ஆகிய மூவரும் நேற்று சித்தன்னவாசல் அருகே உள்ள மலையடி பள்ளத்தில் உள்ள நீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரின் சடலத்தையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், மூவரின் உடலையும் வாங்க மறுத்த அவரது உறவினர்கள், மாரிக்கண்ணுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும்; தற்போது தலைமறைவாக உள்ள கருப்பையாவை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சமரச பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட கருப்பையாவை கைது செய்து விசாரணை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்களின் உடல்களை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM