ஒகடோகோ : புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், அப்பாவி மக்கள், 34 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், சமீபகாலமாக அல் – குவைதா, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் அப்பாவி விவசாயிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து உள்ளது. பயங்கரவாதிகள், விவசாயிகளை துரத்திவிட்டு, அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இதையடுத்து, இந்தாண்டு ஜனவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நீக்கி விட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறையவில்லை.
இந்நிலையில், கோஸ்ஸி மாகாணம், போரஸோ கிராமத்தில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தோரை சரமாரியாக சுட்டனர். இதில், 34 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு, பிப்ரவரி – மே வரை, புர்கினா பாசோவில், 500க்கும் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் நடந்ததை விட, இரு மடங்கு அதிகம்.
கடந்த ஜூன் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய 12 தாக்குதல்களில், 135 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு மக்கள் இரையாவதை தடுக்க, இரண்டு ராணுவ மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு வாரங்களுக்குள் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அங்கு சென்று தங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறைக்கு அஞ்சி, ஏற்கனவே, 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
Advertisement