ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டியிருக்காவிட்டால் இன்று பெட்ரோல் லிட்டர் 40 ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கும் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி மத்திய அரசைக் கேலி செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:
நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்களை மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. டீசல் லிட்டருக்கு 102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உண்மையில் இதற்கெல்லாம் பொறுப்பு அவுரங்கசீப் தான். பிரதமர் நரேந்திர மோடி அல்ல.
நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு அக்பர் பொறுப்பு. பெட்ரோல் லிட்டருக்கு 115 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு ஷாஜகானே பொறுப்பு. அவர் தாஜ்மஹாலைக் கட்டவில்லை என்றால், இன்று பெட்ரோல் 40 ரூபாய்க்கு விற்கப்படும். தாஜ்மஹாலையும், செங்கோட்டையையும் கட்டி ஷாஜகான் தவறிழைத்து விட்டார். அந்த பணத்தை அவர் சேமித்து வைத்திருந்து, 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.
இந்திய முஸ்லீம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜின்னாவின் முன்மொழிவை நாங்கள் நிராகரித்தோம். இந்த ஆண்டு சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடுவோம். ஜின்னாவின் முன்மொழிவை நிராகரித்து இந்தியாவில் தங்கியதற்கு சாட்சியாக இன்று நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்தியா எங்கள் அன்புக்குரிய நாடு. நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டோம். நீங்கள் எவ்வளவு முழக்கங்களை எழுப்பினாலும், எங்களை வெளியேறச் சொன்னாலும் நாங்கள் இங்கே தான் வாழ்வோம், இங்கேயே சாவோம்.
இவ்வாறு அசாதுதீன் ஒவைசி பேசினார்.