அம்பத்தூரில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட காவலரை தாக்கி கைப்பேசியை உடைத்த 3 பேர்களை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அம்பத்தூர், வெங்கடாபுரம், ஓரகடம் சாலையை சேர்ந்தவர் மோனிஷ் (19). இவர் கல்லூரி மாணவர். திங்கட்கிழமை காலை மோனிஷ், தனது வீட்டு அருகில் வசிக்கும் தனியார் நிறுவன பெண் ஊழியரை காரில் ஏற்றிவிட அம்பத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர் இவர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், பெண்ணின் கையில் இருந்த கைப்பேசியை கையால் அடித்து பறித்து கீழே உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், மோனிஷ் அம்பத்தூர் பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த ரோந்து காவலர் பிரபாகரனிடம் தகவல் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு டீக்கடையில் புகை பிடித்துக் கொண்டிருந்த மூவரையும் பிடித்து தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மூவரும் பிரபாகரனை தாக்கி அவரது கைப்பேசியையும் கீழே போட்டு உடைத்துள்ளனர். இது குறித்து மோனிஷ், பிரபாகரன் ஆகியோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பாரதியார் தெருவைச் சார்ந்த பிரபு (29), அயனாவரம், ராமலிங்கபுரம், செங்கல்ராயன் தெருவைச் சேர்ந்த சூர்யா (24), ஊரப்பாக்கம், முத்துவேல் நகரைச் சேர்ந்த சிவகுமார் (43) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் மூவரையும் கைதுசெய்து, வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுப்பட்டு உள்ளனரா என விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM