பெங்களூரு: பெங்களூரு விஜயநகர் போக்குவரத்து போலீஸ் நிலைய ஏட்டு ஹரீஷ் கடந்த 3-ந்தேதி மாரேனஹள்ளி சந்திப்பு பகுதியில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஸ்கூட்டரில் ஒரு வாலிபர் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வந்தார். இதை நவீன கருவி உதவியுடன் கண்காணித்த ஏட்டு ஹரீஷ், அந்த ஸ்கூட்டரின் பதிவெண் பலகை போலி என்பதையும் கண்டறிந்தார்.
உடனே அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பிடிபட்ட வாலிபர் விஜயநகர் அருகே பட்டோரா பாளையாவை சேர்ந்த நிகில் என்பதும், இவர் போக்குவரத்து விதிமீறியதாக பெங்களூருவில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 55 வழக்குகள் பதிவாகி இருப்பதும், அவர் போலி வாகன பதிவெண்ணுடன் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார் ரூ.28,500 அபராதமும் விதித்தனர்.