மும்பை: மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பெய்துவரும் கனமழையால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்திப் பத்திரமான இடங்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 5 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மும்பைக்கு
மும்பை மழை: முக்கியத் தகவல்கள்
1. தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாபூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்குமாறு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2. மழைநீர் தேங்கியுள்ளதால் அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் நகரில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
3. செம்பூர் பகுதியில் ஆஷிச் சினிமா அமைந்துள்ள பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மும்பை போக்குவரத்து போலீஸார் மக்கள் மாற்றுப்பாதையை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
4. அதேபோல் சியான் சர்கிளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்து கடந்து செல்லும் சூழலே உள்ளது.
5. மும்பையில் புறநகர் ரயில் சேவையும், சாலைப் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.
6. ராய்கட் மாவட்டத்தில் குண்டலிகா ஆற்றில் அபாய எல்லையை தாண்டி வெள்ள நீர் பாய்கிறது. தானே மாவட்டத்தின் உலாஸ் ஆறும் அவ்வாறே நிறைந்து காணப்படுகிறது.
7. தலைநகர் மும்பையில் நேற்றிலிருந்தே கனமழை பெய்துவரும் சூழலில் மும்பை நகரையும் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்ளுமாறு முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
8. ரத்னகிரி மாவட்டம் சிப்லுன் நகர் கடந்த ஆண்டு பருவமழையின்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஆகையால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.